×

அரியானா வன்முறையில் தொடர்பு காங். எம்எல்ஏ கைது: இன்டர் நெட் முடக்கம், 144 தடை உத்தரவு அமல்

சண்டிகர்: அரியானாவில் நூ வன்முறை வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ மம்மன் கானை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அங்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதோடு, 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரியானாவின் நூ மாவட்டத்தில் ஜூலை 31ம் தேதி விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தின்போது கும்பல் ஒன்று கல்வீசி தாக்கியது. இதனால் ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் வன்முறை தொடர்பாக போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வன்முறை சம்பவத்தில் தொடர்புள்ளதாக பெரோஸ்பூர் ஜிர்கா தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ மம்மன் கானின் பெயரையும் போலீசார் பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து விசாரணைக்கு வரும்படி போலீசார் எம்எல்ஏ மம்மன் கானுக்கு இரண்டு முறை அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர் போலீசார் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனிடையே போலீசார் தன்னை கைது செய்ய தடை விதிக்க கோரி செவ்வாயன்று உயர்நீதிமன்றத்தில் எம்எல்ஏ மனு தாக்கல் செய்தார். இதில் தான் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை குருகிராமில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கானின் செல்போன் பதிவுகள், அவரது செல்போன் டவர் இருந்த இடம், அவரது பாதுகாப்பு அதிகாரிகளின் வாக்குமூலம் ஆகியவற்றின்அடிப்படையில் அவர் பொய்கூறுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். நேற்று முன்தினம் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கானுக்கு எதிராக ஆதாரம் இருப்பதாக கூறி கைது செய்வதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு மம்மன் கானை போலீசார் கைது செய்தனர். வன்முறை சம்பவத்தில் மம்மன் கானுக்கு நேரடி தொடர்புள்ளதாகவும், எனவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மம்மன் கான் கைது சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் இன்டர்நெட் சேவை மற்றும் மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்புவது இரண்டு நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, எம்எல்ஏ கானை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

The post அரியானா வன்முறையில் தொடர்பு காங். எம்எல்ஏ கைது: இன்டர் நெட் முடக்கம், 144 தடை உத்தரவு அமல் appeared first on Dinakaran.

Tags : Ariana ,Kong ,MLA ,Amal ,Chandigarh ,Congress ,MLA Mamman Khan ,Dinakaran ,
× RELATED இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பிரதமர் மோடி...